Thursday, 1 January 2026

அன்பின் பரிசு.


பறக்கும் பந்து (குழந்தைப் பாடல்)

பந்து பந்து நல்ல பந்துதான்.
பறக்கும் நல்ல பந்துதான்.
காற்று நிறைஞ்ச பந்துதான்.
கனம் இல்லாத பந்துதான்.


அப்பா தந்த பந்துதான்.
அழகு வண்ணப் பந்துதான்
அடிச்சு நோகாப் பந்துதான்.
ஆடி மகிழும் பந்துதான்.

உருண்டு செல்லும் பந்துதான்.
உதைத்தால் ஓடும் பந்துதான்.
முட்டி எழும் S.
மோதித் திரும்பும் பந்துதான்.

கையால் ஆடும் பந்துதான்.
காலால் அடிக்கும் பந்துதான்.
தலையில் முட்டும் பந்துதான்.
தாவிப் பிடிக்கும் பந்துதான்.

விரட்டி ஓடி ஆடலாம்
உருட்டி ஆடி மகிழலாம்
ஓடி ஆடி உடம்பினை
கூடி பலம் ஏற்றலாம்.

கொ.பெ.பி.அய்யா

Saturday, 15 November 2025

பத்திரம் பாப்பா!

பாப்பா நீ பத்திரம்.

பத்திரமாய் போய் வா!பாப்பா
பத்திரம் பத்திரம் போய்வா பாப்பா
பத்திரம் பத்திரமாய் போய் வா!பாப்பா.

பத்திரம் பத்திரம்  பாப்பா நீ பத்திரம்.
சித்திரம் உன்னை சிதைப்பார் பத்திரம்.
அப்பா அம்மா நேர்முக அனுமதி
அன்றி ஆரையும் நம்பாதே!
பத்திரமாய் போய் வா!பாப்பா

அறியா அந்நியர் எவரோடும் பழக்கம்
அரவே வேண்டாம் மறுத்திடனும்.
அறிந்தவ ரானாலும் அவசியம் இன்றி
அழைப்புக்கு விரும்பிப் போகாதே!
பத்திரமாய் போய் வா!பாப்பா

சின்னப் பொண்ணே  
சின்னப் பொண்ணே.
சிங்காரப் பொண்ணே!
தின்னப் பண்டம் எவர் தந்தாலும்
உண்ணக் கூடாது தெரிஞ்சுக்கோ!
உடன் செல்லக் கூடாது உணர்ந்துக் கோ!
பத்திரமாய் போய் வா!பாப்பா

மயக்கும்  மருந்தைக் 
கலந்துகொடுப்பான்
மனதிற் கொள்ளனும் புரிஞ்சுக்கோ!
மயக்கியுன்னை அவன் வசமாக்கி
மலருனைச் சிதைப்பான் அறிஞ்சுக்கோ!
பத்திரமாய் போய் வா!பாப்பா

அம்ம அப்பா அழைத்தா ரென்றே
பொய்யுஞ் சொல்லுவான். நம்பாதே!
அம்மாவை நான் அறிவேன் என்பான்.
அப்பாவுக்கு நான் நண்பன் என்பான்
ஆசையுங் காட்டுவான் அசையாதே!
பத்திரமாய் போய் வா!பாப்பா

தாத்தாப் பாட்டி அறிவே னென்றும்
தப்பாச் சொல்லுவான்.நெருங்காதே!
கூட்டி வரத்தான் சொன்னாரென்றே
கடத்தப் பார்ப்பான் தொடராதே!
பத்திரமாய் போய் வா!பாப்பா

வீட்டு வேலை ஆளானாலும்
விரும்பியும் பின்னேச் செல்லாதே!
ஒளித்து வைத்துப் பெற்றோரை மிரட்டி
பணங்காசு பறிப்பான் புரிஞ்சுக்கோ!
பத்திரமாய் போய் வா!பாப்பா

சின்னச் சின்னப் பிஞ்சுகள் கூட
சிதைக்கப் படுகிற வன்கொடுமை
பாலியல் மோசடி வன்புணர் மடமை
கதறல் அலறல் அவலங்கள்.
கல்நெஞ்சப் பாவியர் படுபாவங்கள்.
தினந்தினம்  நடக்குது அடாவடிகள்
பத்திரமாய் போய் வா!பாப்பா!

பத்திரம் போய்வா
பள்ளிக்கு நீயம்மா!
உத்திரவாதம் நிச்சயமில்லாக்
காதகர் கலிகாலம் கவனம்மா.
தொடரும் அச்சங்கள் பதறும் துச்சங்கள்
பத்திரமாய் போய் வா!பாப்பா

நிம்மதி இல்லா அம்மா இங்கே
நிலையா நின்றே  சிலையாக
நினையே எண்ணிக் காத்திருப்பேன்
வழியை நோக்கிப் பார்த்திருப்பேன்
பத்திரம் போய்வா பள்ளிக்கு நீயும்
பத்திரமாய் போய் வா!பாப்பா

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.


Saturday, 1 March 2025

வெள்ளக் குதிரை.

வெள்ளக்குதிரை!((குழந்தைப்பாடல்)

வெள்ளக் குதிரை ஒன்று,
துள்ளி வருகிறது இன்று.
செல்லக் குழந்தைகளே நன்று!
அள்ளி மகிழுவீர் கண்டு.
வெள்ளை மனதே வெள்ளைக்
 குதிரை.

பள்ளம் மேடு பார்க்கிறது.
துள்ளித் துள்ளிப் பாய்கிறது!
கள்ளம் மனது இல்லாதே!
கனைத்து முன்னே விரைகிறது.
நினைவில் ஆணைக்குப் பணிகிறது.

கொள்ளைச் சாப்பிடும் குதிரையிது,
துள்ளுது பூமி அதிருது.
வெள்ளைப் புழுதி கிளப்புது.
தானே தரையில் புரளுது!
சோம்பல் நீக்கி நிற்கிறது.

நின்றே நிலையில் ஓய்கிறது.
ஒன்றே உறுதி கொள்கிறது.
பல்லைக் காட்டிக் கனைக்கிறது.
அன்பில் அப்படிச் சிரிக்கிறது!
பண்பில் விலங்கும் தெறிக்கிறது.

தீரன் அவன்தான் சின்னமலை,
வீரமங்கை  நாச்சியாரும்
தேடிக் கண்ட நற்குதிரை,!
போரில் சீறிய மேற்குதிரை.
நேருக்கு நேரே பாய்குதிரை.

சூரன் வீரன் கட்டபொம்மன்
வீரர் மருதவர் வேந்தர்களின்
போர்களில் பாய்ந்த மற்குதிரை!
ஆறுந் தாண்டும் போர்க்குதிரை.
சேறுக்கும் அஞ்சா செருக் குதிரை.

காட்டிக் கொடுத்தத் துரோகிகளை,
துரத்தி உதைத்தத் தென்குதிரை.!
மரணம் எண்ணா உரக் குதிரை.
சரணம் அடையா தமிழ்க் குதிரை.
தருணம் பாரா செயற் குதிரை.

குதிரை உணர்த்தும் பாடங்கள்,
பதித்து மனதில் ஓடுங்கள்.
வளரும் நல்லக் குழந்தைகளே!
வாலிபம் கடந்தும் பயின்றிடுவீர்!
கல்விக்கு என்ன கரை உண்டு!

பார்க்கப் பார்க்க ஊக்கம் எழும்.
தாத்தாப் பாட்டன் நினைவு வரும்.
வீணர் பகைவரை வென்ற கதை,
தானே தூண்டும் தன்னுணர்வை.
பார்வை அதிலே பலம் தெரியும்.

வீணே பகைமை வேண்டாமே.
தானே ஓய்ந்தும் தளராதே!
ஏனோ தானோ எண்ணாதே!
கடமை மறந்தும் ஓயாதே!
உடமை நினைந்தால் மானமே!

விதியை எண்ணி நோவோரை,
விலக்கி வெறுத்துத் தள்ளாதீர்!
கதியை ஊட்டி ஆளாக்கி,
கணக்கில் சேர்ப்பீர் சீராக்கி.
மதியை மதித்துக் கூராக்கி.

சமூக ஆர்வம் அவசரம்.
சுமூக சமூகம் அவசியம்.
வெள்ளைக் குதிரை மனதிலே,
வேகம் வளரனும் செயலிலே!
உள்ளம் ஊக்கம் இலக்காக.

கொ.பெ.பிச்சையா.














சேவல்.

சேவல் (குழந்தைப் பாடல்)

கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே!
கொண்டை ஆட்டும் சேவலே!
கக்கரப் புக்கரப் பாப்பாவை,
கண்டுக் கூவிக் கூப்பிடு!


வண்ண வண்ண இறகுகள்,
வளைந்த வாலுச் சேவலே!
சின்னச் சின்னப் பாப்பாவை
சிறகை விரித்துக் கூப்பிடு!

அசைந்து அசைந்து நடக்கிறாய்
அழகு நல்லச் சேவலே!
விரும்பி நீயும் பாப்பாவை,
இறகு தந்து கூப்பிடு"

கூரை மேலே ஏறு!
கூவிக் கூவிப் பாடு"
சோறு உண்ணப் பாப்பாவை,
சொல்லிச் சொல்லிக் கூவிடு!
.
கொண்டையைக் கொண்டைய ஆட்டுற
சண்டைக்கு வேண்டாம் சேவலே!
சந்தோசமாகப் பழகுவோம்.
சகோதரம் ஆகிக் கூடுவோம்.

காலைத் தினமும் கூவிடு!
கடமைகள் செய்ய ஏவிடு!
எழுப்பி உலகின் மாந்தரை
உழைப்பின் மாண்பைக் கூவிடு!

கொ.பெ.பி.அய்யா.
..

Saturday, 1 February 2025

நல்வழி.

புதிய நல்வழி 5 (குழந்தைப் பாடல்)

நதிகள் எல்லாம் இணைப்போமே!
நாட்டு நலமும் செழிக்குமே!.
நிலங்கள் எல்லாம் நனைப்போமே!.
நீர் வளம் தங்கி நிலைக்குமே!
நுகரும் விலையும் சரியுமே!
நூதனம் பெருகி விரியுமே!
நெல்வயல் பரவிப் பெருகுமே!
நேரும் செல்வம் தேறுமே!
நொறுங்கி வறுமையும் சாகுமே!
நோக்கம் திருமை ஆகுமே!
நௌவும் கரை வந்து சேருமே!


நௌ---மரக்கலம்

கொ.பெ.பி.அய்யா.

நாய்க் குட்டி.

 நாய்க்குட்டி(குழந்தைப்பாடல்)

நாய்க்குட்டி நாய்க்குட்டி!
நானுங்கூடச் செல்லக்குட்டி.
அப்பாவுக்கு நல்லக்குட்டி.
அம்மாவுக்கு வெல்லக்கட்டி.

ஆடி ஓடிக் கூடலாம்
ஆருக்கும் உதவியும் செய்யலாம். 
பன்னும் பட்டரும் தின்னலாம்
இன்னும் நல்லா வளரலாம்

அம்மா சொல்லைத் தட்டாதே!
அடுப்படிப் பக்கம் போகாதே!
அங்கே இங்கே ஓடாதே!
எதையும் தட்டிக் கொட்டாதே!

வள வளப்புத் தரையிலே,
வழுக்கி விழவும் ஓடாதே!
நேரே நேரே நடக்கனும்
பாலை உறிஞ்சிக் குடிக்கனும்.

விடு விடுனு அலையாதே!
வீட்டுக்கு வெளியே ஓடாதே!
புடு புடுனு வண்டி வரும்.
பட்டு அடியும் வாங்காதே!

நல்ல பாப்பாப் பேரெடு!
நன்றி சொல்ல வாலாட்டு.
அப்பா பேச்சைக் கேட்கனும்.
தப்புச் செஞ்சா ஒத்துக்கனும்.

வீட்டைக் காப்பது உன் கடமை.
நாட்டைக் காப்பது என் கடமை.
வேண்டிக் கேட்டுச் சாப்பிடலாம்
வெறுக்கும் திருட்டை விலக்கிடலாம்.

கொ.பெ.பிச்சையா.

அகரவரிசை.

குழந்தைப்பாடல்(அகரவரிசை)

அப்பா இங்கே வா!! வா!
ஆடை வாங்கித் தா!தா!
இன்றே நாமும் போகலாம்.
ஈரக்காற்றில் மகிழலாம்..
உல்லாசமாய் இரயிலிலே
ஊட்டிமலைக் காணலாம்.
எழிலாம் மலர்க் கண் காட்சி
ஏரிப்படகும் இரசிக்கலாம்.
 !!ஐயென ஆடலாம்
ஒன்றின் பின்னே ஒன்றாக
ஓடுது மேகஙகள் அழகாக.
ஔடதங்கள்  எல்லாமே
௮ஃதேயாகும் நலமாக.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா
சை